தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த சில வருடங்களாக குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடிவருகிறது. இந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக என்றைக்கு அந்தோணிகிரேஸ் மேயராக பதவி ஏற்றாரோ அன்றைய தினத்திலிருந்து தூத்துக்குடி மாநகர் பகுதியில் மாதத்திற்கு 3 நாட்கள் மட்டும் தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அப்படியென்றால் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யும் சூழ்நிலை இருந்தது. ஆணையர் மதுமதி ஐ.ஏ.எஸ், வசூல் ராஜா சக்கரவர்த்தி பொறியாளராக இருந்த ராஜகோபால் குடிநீரில் கொள்ளையடித்து கோடீஸ்வாரன மாறிய சரவணன் ஆகியோர் குடிநீரை சரியான முறையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அமைச்சர் சண்முகநாதன், தூத்துக்குடி எம்.எல்.ஏ செல்லப்பாண்டியன், மேயர் அந்தோணி கிரேஸ் மூவரும் குடிநீர்பிரச்சனை தீர்க்க மனமில்லாத மனநிலையில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி குடிநீர் பிரச்சனைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதனை அடுத்து அதிமுக தலைமை குடிநீர் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் சண்முகநாதனிடம் விளக்கம் கேட்க திடீரென்று ஞானஉதயம் பிறந்தவர் போல விடுமுறை நாளில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவந்த கோமான் போல தாண்டவம் ஆடினார். அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை அழைத்துக்கொண்டுஅமைச்சர் சண்முகநாதன் வல்லநாடு குடிநீர் பணிகளை பார்வையிட்டு அதன்பிறகு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் மேயர் அந்தோணி கிரேஸியே அமைச்சர் சண்முகநாதன் கடைசி வரை திரும்பியே பார்க்கவில்லை. உண்மையில் கோபமா அல்லது நாடகமா என்று கேள்வி எழுந்துள்ளது. எதுவாக இருந்தாலும் இறுதியில் தெரியவரும்..அதாவது கத்திரிகைக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வரும் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
அமைச்சர் சண்முகநாதன் , மாநகராட்சி (பொ) ஆணையராக உள்ள ராக்கப்பனிடம் சில உத்தரவுகளை அமுல்படுத்தும்படி ஆணையிட்டார். அதில் எது எப்படியிருந்தாலும் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்தே ஆகவேண்டும். யாரை மாற்றினாலும் மாற்றிக்கொள்ளுங்கள் உங்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. குடிநீர் மட்டும் சரியான முறையில் விநியோகம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன் எதிரொலியாக தூத்துக்குடி மாநகரில் உள்ள 4 மண்டல உதவி ஆணையர்களை இடம் மாற்றம் செய்து அதிரடி மன்னன் ராக்கப்பன் உத்தரவிட்டார். இதில் சில உதவி ஆணையர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் மாறுதல் செய்யப்பட்ட உதவி ஆணையர் சரவணன் மட்டும் அரசியல் வாதிகள் போல கோஷ்டி சேர்த்து முன்பு பணிபுரிந்த மண்டலத்திலேயே பணிபுரிவேன், ஆணையர் (பொறுப்பு) ராக்கப்பன் போட்ட மாறுதலை ரத்து செய்வேன் சபதம் போட்டுள்ளார். நிழல் மேயராக இருக்கும் கவியரசு விமானம் மூலம் மூன்று மாமன்ற உறுப்பினர்களை சென்னைக்கு அழைத்துச் சென்று அங்கு அமைச்சா; சண்முகநாதன் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகளை சந்தித்து முன்பு பணிபுரிந்த மண்டலத்திலேயே உதவி ஆணையராக சரவணனை நியமிக்க வேண்டும் என்று மனு கொடுத்தார். இதற்கான செலவுகளை சரவணன் ஏற்றுக்கொண்டார்.
மேயர் அந்தோணிகிரேஸ் தலைமையில் 15 மாமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் ஊரான பண்டாரவிளைக்கு சென்று அமைச்சர் சண்முகநாதனை தரிசனம் செய்து, சரவணன் பணிமாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்கு அமைச்சா; சண்முகநாதன் செவி சாய்க்கவில்லை. வல்லநாட்டிலிருந்து வரும் குடிநீர் அளவு முன்பை விட தற்போது கூடுதலாகவே வருகிறது. இதற்கு ஆணையர் (பொ) வகிக்கும் ராக்கப்பனின்செயல்பாடு தான் என்று மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் கூறுகின்றார்கள். இதுபற்றி மாநகராட்சி குடிநீர் பணியை கவனித்து வரும் அதிகாரிஒருவரிடம் கேட்டபொழுது முன்பெல்லாம் 8 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. 24 MLD அளவு தண்ணீர் வந்துகொண்டிருந்தது. தற்போது கூடுதலாக வருகிறது. வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடி ராஜாஜி பூங்கா டேங்கிற்கு வரும் வழியில் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மெயின் லயனில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை, ஸ்பின்னிங் மில், வ.உ.சி கல்லூரி, அரசு பாலிடெக்னிக், கலெக்டர் ஆபீஸ், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலம், இந்துபாரத் பவர் பிளாண்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களுக்கு மட்டும் சுமார் 4 முதல் 6 MLD அளவு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சரியான முறையில் வழங்க வால்வு அமைக்கப்பட்டு அதன் மூலம் சில நேரங்கள் மட்டும் குடிநீர் வழங்கும் சூழ்நிலையை உருவாக்கவேண்டும். அப்படி உருவாக்கப்பட்டால் மேலும் கூடுதலாக குடிநீர் தூத்துக்குடி மாநகர் பகுதிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில நிறுவனங்கள் அனுமதியின்றி மெயின் லயனில் இருந்து திருட்டுத் தனமாக குடிநீர் எடுத்துவருகின்றது. இதனையும் தடுக்க வேண்டும். இதுபற்றி மாநகராட்சி (பொ) ஆணையர் ராக்கப்பனிடம் கேட்டபொழுது முன்பு 24 MLD தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது 27 MLD தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. பல இடங்களில் லீக்கேஜ் அடைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தடைபடாத வகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வல்லநாட்டிலிருந்து வரும் பைப் லைனில் 18 இடங்களில் உடைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. காடு மற்றும் கிராமப்பகுதிகள் வழியாக குடிநீர் பைப் லைன் வருவதால் கிராமத்தைச் சேர்ந்த சிலர் குடிநீர் பயன்பாட்டிற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றார்கள். இது முற்றிலும் தடுக்கப்படும். இதற்கு நிரந்தரமாக தீர்வு காண 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் வாட்ச்மேன் நியமிக்க முடிவு செய்துள்ளோம். வரும் காலங்களில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோம் செய்யப்படும் என்று கூறினார்.
மாநகராட்சியில் உதவி ஆணையர்கள், வருவாய் அலுவலர் மற்றும் பல்வேறு அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான உத்தரவை ஆணையர் (பொ) ராக்கப்பன் செயல்படுத்தினார். அதுபோல கடந்த சில நாட்களாக தொடர்ந்து குடிநீர் பணிகளை கண்காணித்து வருகின்றார். இந்த நிலையில் மேயர் அந்தோணிகிரேஸ் அவருடைய மகன் கவியரசு மற்றும் சில மாமன்ற உறுப்பினர்கள் உதவியுடன் பணிமாறுதல் செய்யப்பட்டவர்களை மீண்டும் முன்பு பணிபுரிந்த இடங்களில் பணிபுரியும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஆணையர் (பொறுப்பு) ராக்கப்பன் அவர்களை மிரட்டுகிறார்கள். அதுபோல 2010ம் ஆண்டு தற்போது (பொ) ஆணையராக இருக்கும் ராக்கப்பனுக்கும் அப்போது பணியிலிருந்த மாநகராட்சி ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அதில் சில புகார்கள் தேவையற்ற முறையில் ராக்கப்பன் மீது கூறப்பட்டது. அதனை எல்லாம் ராக்கப்பன் மீது மேயர் மற்றும் அவருடைய மகன் குற்றம் சுமத்தி, ராக்கப்பனை மிரட்டி தங்கள் கைப்பாவையாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்.
அதுபோல உதவி ஆணையராக இருக்கும் சரவணன் அரசியல்வாதி போல முன்பு பணிபுரிந்த மண்டலத்தில் பணிபுரிய கோஷ்டி சேர்த்து வருகிறார். சரவணன் இடைக்கால பணிநீக்கம் செய்ய அதிக அளவில் முகாந்திரம் உள்ளது. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால் அதனை விசாரித்து வரப்படுகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் எந்த நேரமும் சரவணன் இடைக்கால பணிநீக்கம் செய்யப்படுவார். மேலும் மாநகராட்சி நிர்வாக அலுவலர் சந்திரமோகன், வருவாய் அலுவலர் தனசிங், ஆகிய இருவரையும் உடனடியாக மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்யவேண்டும். தற்போது குடிநீர் பிரச்சனையை முழு அளவில் சரி செய்து விட்ட சுழ்நிலையில் ஆணையர் (பொ) ராக்கப்பனுக்கு அரசு முழு அளவில் ஆதரவு கரம் தான் நீட்டவேண்டும்.
செயல்படாத மேயர் அந்தோணிகிரேஸ், குளம் ஆக்கிரமிப்பு அமைச்சர் சண்முகநாதன் ஆகியோர் திடீரென்று ஒன்று சேர்ந்து நாடகத்தின் முடிவில் ராக்கப்பனை பழிகடா ஆக்காமல் அவரை உற்சாகப்படுத்தி குடிநீர்பிரச்சனை முழு அளவில் தீர்க்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
மக்கள்செய்திமையம் 8.8.2015 காலை 6மணி