
மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கும் அதிமுக அரசின் ரூ5000கோடி ஊழல்களை துறைவாரியாக 60க்கு மேற்பட்ட புகார்களை ஆதாரங்களுடன் அனுப்பி உள்ளது.
மேலும் அதிமுக அரசின் சென்னை மாநகராட்சி மற்றும் மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம், சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வீட்டு வசதித்துறை, சி.எம்.டி.ஏ, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, கல்வித்துறை, டாமின், ஆவின் மற்றும் தொழில் துறைகளில் நடந்துள்ள ரூ50,000கோடி ஊழலுக்கான 35,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களின் நகலை, தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் மூலம் மக்கள்செய்திமையம் பெற்றுள்ளது.


மக்கள்செய்திமையம் கடந்த மூன்றாண்டுகளாக தினமும் ஒரு ஊழலை சிலைடு செய்தியாக வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
2021 சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவு முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை 02.06.2021 அன்று நடைபெற இருப்பதால், இந்த இடைக் கால கட்டத்தில் அதிமுக அரசின் ரூ50,000கோடி ஊழல் புகார்களை ஆதாரங்களுடன் துறை வாரியாக தமிழக ஆளுநருக்கும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கும் அனுப்பி வைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை மக்கள்செய்திமையம் தொடங்கிவிட்டது…
இதை தவிர விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதால், தாம்பரம் நகராட்சியின் ஊழல்கள், மதுரை மாநகராட்சியின் ஊழல்கள், தூத்துக்குடி மாநகராட்சியின் ஊழல்கள், திருப்பூர் மாநகராட்சியின் ஊழல்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் ரூ1000கோடி ஊழல் இரண்டாம் பாகம் என உள்ளாட்சி அமைப்புகளின் பல ஊழல் புத்தகங்களை வெளியிட முடிவு செய்துள்ளது.
528 பேரூராட்சி அதிகாரிகளின் ஊழல் முகங்கள் என்ற புத்தகம் விரைவில் வெளியாகும்..

மக்கள்செய்திமையம் ஆசிரியர் அன்பழகன் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், குண்டர் சட்டத்தில் அடைத்தாலும், ஊழலை ஒழிக்கும் முயற்சியில் பீனிக்ஸ் பறவையாக மக்கள்செய்திமையம் ஆசிரியர் அன்பழகன் செயல்படுவார் …