Breaking News
Home / பிற செய்திகள் / அரசு போக்குவரத்துக் கழகம்.. அரசாணை எண்.148 &149 என்னாச்சு… ஒய்வூதிய பலன் ரூ1000கோடி கிடைக்குமா..

அரசு போக்குவரத்துக் கழகம்.. அரசாணை எண்.148 &149 என்னாச்சு… ஒய்வூதிய பலன் ரூ1000கோடி கிடைக்குமா..

  அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு  கொடுக்கப்பட வேண்டிய ஒய்வூதிய பலன் கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. ரூ1000 கோடி நிலுவை தொகையை வழங்க முடிவு செய்து, அரசாணை எண்.148&149ல் 21.12.2020ல் வெளியானது.

 போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஒவ்வொரு போக்குவரத்து கார்ப்பரேசனிலிருந்து ஒய்வு பெற்ற அதிமுக ஊழியர்கள் ஒருவரை தேர்வு செய்து, பட்டியலை அனுப்புங்கள், அவர்களுக்கு முதல்வர் ஒய்வூதிய நிலுவைத் தொகை வழங்குவார் என்று வாய் மொழி உத்தரவு போட்டார்.

  அரசு போக்குவரத்து கழகத்தின் ஒவ்வொரு கார்ப்பரேசனிலிருந்து ஒய்வு பெற்ற அதிமுக ஊழியர் பட்டியலை அனுப்பினார்கள். ஆனால் பட்டியல் போக்குவரத்துத்துறை அமைச்சர் அலுவலகத்தில் குறட்டை விடுகிறது.

1.         கடந்த 16/08/2019 அன்று போக்குவரத்துக் கழகங்களில் அதற்கு முன் இரண்டரை ஆண்டுகளாக நிலுவையிருந்த பணி ஓய்வு பயன்களைத் தீர்வு செய்வதற்காக ரூ.1093 கோடி கடன் அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டது, அதனைத் தொடர்ந்து சென்னை, மதுரை, சேலம், கும்பகோணம், விழுப்புரம் ஆகிய 5 இடங்களில் ஆடம்பரமாக அமைச்சர்கள் கலந்து கொண்ட விழா எடுத்து மார்ச் 2019 வரை பணி ஓய்வு பெற்றவர்கள், இறந்தவர்களின் வ.வை.நிதி, பணிக்கொடை போன்ற பணிமுடிவுப் பயன்கள் வழங்கப்பட்டது.

2.         அதன் பின் ஏப்ரல் 2019 லிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு பணப்பயன் வழங்காமல் நிறுத்தப்பட்டது.

3.         கொரோனா நோய்த் தொற்று மற்றும் அரசின் நிதி நெருக்கடியினை சமாளிக்க மே 2020 லிருந்து ஓய்வு கால வயது 59 என உயர்த்தி பணி ஓய்வு நிறுத்தப்பட்டது.

4.         போக்குவரத்துக் கழக நிர்வாகங்களின் சார்பில் ஏப்ரல் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிமுடிவுப் பயன்கள் வழங்க அரசிடம் நிதி உதவி கேட்டு கருத்துரு 26/05/2020ல் (அரசாணை எண் 148 / பாா்வை எண் 8) அனுப்பப்பட்டது.

5.         அதனைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட அலுவலகக் குறிப்புக் கோப்பில் தொடர்ந்து நிதித்துறை சந்தேகம், ஆட்சேபணை, மேல் விபரம் கேட்டு என குறிப்புகள் எழுதி திருப்பி யனுப்பி, மீண்டும் சமா்ப்பித்து என ஒரு வருடமாக கோப்பு சுற்றிக்கொண்டே இருந்தது. போக்குவரத்துக் கழகங்களில் அவ்வப்போது போராட்ட இயக்கங்கள் நடந்து கொண்டே இருந்தது.

6.         ஒருபுறம் தேர்தல் நெருங்கியது, மறுபுறம் தொழிலாளர் ஆணையர், நீதிமன்ற தலையீடுகள் என நெருக்கடி முற்ற ஆரம்பித்தது.  22/10/2020 அன்று தொழிலாளர் ஆணையர் முன்பு நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையில் தொழிலாளர் ஆணையர் இதற்கு விரைவாக தீர்வு காண நிர்வாகத் தரப்பை வலியுறுத்தினார்.  அடுத்த சில தினங்களில் ஆணையர் மாற்றப்பட்டார்.

7.         பின்னர் 15/12/2020 அன்று நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையின் போது தற்போதைய தொழிலாளர் ஆணையர் 3 தினங்களுக்குள் நிதி ஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியிட்டு தகவல் சொல்ல நிர்வாகத் தரப்பிற்கு அறிவுரை வழங்கினார்.

8. 21/12/2020 அன்று தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் அரசு தரப்பில் ரூ 972 கோடி ஒதுக்கீடு செய்ய அரசாணை எண் 148 மற்றும் 149 நகல்கள் தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்டது.

9. அரசாணையில் ஏப்ரல் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை பணி ஓய்வு பெற்றவர்கள், இறந்தவர்கள் மற்றும் அதன் பின்னா் ஏப்ரல் 2020 முதல் ஆகஸ்ட் 2020 வரை ஒவ்வொரு கழகங்களிலும் நிகழ்ந்த தன்விருப்ப ஓய்வு ஆகியவற்றிற்கும் சேர்த்து ரூ.1555,57 கோடி தேவை என்பதை பதிவு செய்து இருப்பினும் ஏப்ரல் 2019 முதல் டிசம்பர் 2019 வரை ஓய்வு பெற்றவர்கள் பணப்பயன் தீர்விற்காக ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

10.       அரசாணை எண் 149ன் பத்தி எண் 8ல் அனைத்து நிர்வாக இயக்குனர்களும் ஏப்ரல் 2019 முதல் டிசம்பர் 2019 வரை ஓய்வு பெற்றவர்கள், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு வ.வை.நிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்பு, பணிமுடிவின்போது நிலுவையிருந்த விடுப்புகளுக்கான ஊதியம் ஆகியவற்றை ஒரு வாரத்திற்குள் தீர்வு செய்துவிட்டு அதன் விபரத்தை அரசிற்கு தெரிவிக்க வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் கடுமையாக பார்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

     ஆனாலும் அரசாணை வெளியாகி 25 நாளாகியும் இன்னும் மேற்படி தொகைகள் பட்டுவாடா ஆகவில்லை.  இரண்டாண்டு காலமாக காத்திருந்து அரசாணை வெளிவந்தவுடன் விரைவில் பணம் கிடைத்துவிடும் என கடன் வாங்கிய இடத்தில் தவணை சொல்லிய நபர்களெல்லாம் தவித்துக் கொண்டு உள்ளனர்.

            சட்டப்படி ஓய்வு பெற்றதிலிருந்து 30 நாட்களுக்குள் தீர்வு செய்ய வேண்டிய தொகையை அணை கட்டி நிறுத்தி வைத்து, அதை கொடுப்பதிலும் விளம்பரம் தேடிக் கொள்ள காத்திருக்கும் அரசு என தொழிலாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

 போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சில கேள்விகள்..பதில் கிடைக்குமா..

 அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒய்வு பெற்று ஒய்வூதிய பலன் கிடைக்காமல் தவிக்கும் ஊழியர்களின் கண்ணீருக்கு விமோசனம் கிடைக்குமா..

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்.. தூய்மை இந்தியா திட்டமா- டெங்கு கொசுப்பண்ணையா..

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் குப்பை குவியலைதான் பார்க்க முடிகிறது. குப்பை அள்ளும் நிறுவனங்களிடம்  கமிசன் வாங்க மட்டுமே அதிகாரிகளுக்கு தெரியும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *