
12.1.2020 விடியற்காலை என்பதைவிட நள்ளிரவு 3மணியளவில், வீட்டின் காலிங் பெல் அடித்துக்கொண்டே இருந்தது. என்ன.. என்ன என்று கதவை திறந்தவுடன், சைதாப்பேட்டை காவல்துறை அதிகாரிகள், உங்களை விசாரிக்க வேண்டும் என்று கையை பிடித்து இழுத்தார்கள், அங்கிருந்த உதவி ஆணையர் எனக்கு அன்புவை தெரியும் நான் அழைத்து வருகிறேன் என்றவுடன் சைதாப்பேட்டை உதவி ஆய்வாளர் அமைதியானார்.
கொஞ்சம் காத்திருங்கள் கழிப்பறைக்கு சென்றுவிட்டு, பல் துலக்கிவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு, அடுத்த 45 நிமிடங்களில் புறப்பட்டேன். என்னை கைது செய்ய, இரண்டு உதவி ஆணையர்கள், இரண்டு ஆய்வாளர்கள், நான்கு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 100 காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தது.. உண்மையில் என்னதான் நடந்தது…
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், நந்தனம் YMCA மைதானத்தில் 2020 ஜனவரி 9ம் முதல் புத்தக கண்காட்சி நடத்தியது. புத்தக கண்காட்சியில் ரூ36,580/- செலுத்தி, ஸ்டால் 101 ஐ பெற்றோம். MAKKALSEITHIMAIYAM NEWS(OPC) PVT LTD ஸ்டாலில் அதிமுக அரசின் ஊழல் புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று சங்க நிர்வாகிகள் மிரட்டினார். எழுத்துமூலம் கடிதம் கொடுத்தால், ஸ்டாலை காலி செய்வதாக கூறினோம். எழுத்து மூலம் கடிதம் கொடுத்த, ஒரு மணி நேரத்தில் ஸ்டால் 101 ஐ காலி செய்து, ஒப்படைத்தோம். ஆனால் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் முருகனை, ஸ்டால் 101க்கு அருகே இரும்பு கம்பியால் தாக்க முயற்சி செய்ததாக பொய் வழக்கு பதிவு செய்து, 11 நாட்கள் புழல் சிறையில் அடைத்தார்கள். புழல் சிறையில் உணவு கிடைக்காமல் இரண்டு நாட்கள் பட்டினியாக கிடந்தேன்..





வேடிக்கை என்னவென்றால் பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் நாம் வெளியிட்ட அதிமுக அரசின் ஊழல் புத்தகங்களை பெயர்களை பதிவு செய்துள்ளார்கள்..
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் படி ஆவணங்களை பெற்று, அதிமுக அரசின் ஊழல் புத்தகங்கள் ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டது. அந்த ஊழல் புத்தகங்களை தமிழக அரசு தடை செய்யவில்லை. தடை செய்யாத ஊழல் புத்தகங்களை விற்பனை செய்ய தடையே இல்லை என்று சங்கத்துக்கு தெரியாமல் போனது வேடிக்கையாக உள்ளது.
பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தானாக முன்வந்து, நான் கைது செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது.
அன்பழகன் என்ற தனி மனிதனை பார்த்து, தமிழக அரசே பயப்படுவதை பார்க்கும் போது, பெருமையாக இருந்தாலும், கைது என்ற நிலை வரும் போது குடும்பமே பாதிக்கப்படுவதால் பத்திரிகை துறையில் தொடர வேண்டுமா என்ற கேள்வி மனதுக்குள் எழுந்துள்ளது..
நான் கைது செய்யப்பட்ட போது அறிக்கை வெளியிட்டு ஆதரவு கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வை.கோ, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டி.டி.வி தினகரன் , சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணை செயலாளர் பாரதிதமிழன், இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் தென்னிந்திய செயலாளர் அசுதுல்லா மற்றும் ஆதரவு அளித்து அறிக்கை வெளியிட்ட அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பத்திரிகையாளர் சங்கங்கள், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட ஆதரவு அளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளர், மூத்த பத்திரிகையாளராகிய எனக்கு ஏற்பட்ட கைது நிலையை பார்க்கும் போது, தமிழ்நாட்டில் பத்திரிகை ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.