
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஊழலில் சிக்கி சீரழிந்துக்கொண்டு இருக்கிறது. புளு மெட்டல் குவாரி விதிமுறை மீறல், சட்டத்துக்கு புறம்பாக குவாரி செயல்பட்டது தொடர்பாக விதிக்கப்பட்ட அபராதம் ரூ400கோடி தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் கடலோர கிராமங்களில் உள்ள அரசு நிலத்தில் உப்பு எடுக்க குத்தகைக்கு கொடுப்பதில் ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் பகுதியில் உள்ள மாமல்லபுரம்(சர்வே எண்.140/1A, 141/1A), பூஞ்சேரி(சர்வே எண்.62,205,214), கடம்பாடி(269/2) கொக்கிலமேடு(129/1)மணமை(430/1A) உள்ளிட்ட கடலோர கிராமங்களில் 1433.78ஏக்கர் அரசு சொந்தமான நிலங்களில் உப்பு எடுக்க, மாருதி கிறிஸ்டல் உப்பு நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ1,29,111(ரூ1.29இலட்சம்)க்கு குத்தகை கொடுக்கப்பட்டு இருந்தது.

என்ன.. இது…1433 ஏக்கருக்கு ரூ1.29 இலட்சம் தான் ஆண்டுக்கு குத்தகையா? ஒரு ஏக்கருக்கு குத்தகை ஆண்டுக்கு ரூ100/- கூட இல்லையா? குத்தகை வெறும் ரூ90 மட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதெல்லாம் பெரிய எடத்து விவகாரம்.. கொஞ்சம் ஆவேசமாக பேசினால், எழுதினால் குண்டர் சட்டத்தில் கைது செய்துவிடுவார்கள்.. நமக்கேன் வம்பு…
2011ம் ஆண்டு வரை 1433.78 ஏக்கரில் மாருதி கிறிஸ்டல் உப்பு நிறுவனம், உப்பு எடுத்து வந்தது. ஆனால் தற்போது என்ன நிலை என்று தெரியவில்லை. திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திலும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டால் பதிலே கிடைக்கவில்லை.
மேலும் இதே போல் 1200 ஏக்கர் நிலம், குத்தகைக்கு கொடுக்கப்படாமல், வருவாய்த்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு மாமூல் கொடுத்து, சில உப்பு நிறுவனங்கள் உப்பு எடுத்து வருவதாகவும் தெரிகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் உள்ள அரசு நிலங்களில் உப்பு எடுக்க குத்தகைக்கு கொடுப்பதில் மெகா முறைகேடு நடந்து வருகிறது என்பது உறுதியாகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் என்பது ஊழல் மாவட்டமா? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
அத்திவரதர் புகழ் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ், கடலோர கிராமங்களில் உள்ள அரசு நிலங்களில் உப்பு எடுக்க குத்தகைக்கு கொடுக்கப்பட்டது தொடர்பாக விரிவான அறிக்கை வெளியிடுவாரா?