சேவை பெறும் உரிமை சட்டமும் … 234 கோமாளிகளும்.

இன்றைய ஆட்சியாளர்கள் செய்யத் தவறியவையே எங்கள் கொள்கைகள் என்று நம்மவர் கமல் தெளிவுபடக் கூறியுள்ளார்.

   234 சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யத் தவறியதில் முதன்மையானது , 19 இந்திய மாநிலங்களில் உள்ள சேவை பெறும் உரிமை சட்டத்தை ( RTS ) தமிழகத்தில் நிறைவேற்றத் தவறியதாகும்.

* இந்திய பாராளுமன்றத்தில் 2005 ல் நிறைவேற்றப்பட்ட ” தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் ( RTI ) பயனை நாம் நன்கு அறிவோம்.

* இந்தச் சட்டத்தைவிட பலமடங்கு நன்மை தரக்கூடிய ” சேவை பெறும் உரிமை சட்டத்தை( RTS ) 2011 ல் முதலில் இயற்றிய மத்தியப் பிரதேசத்தைப் பாராட்டி ஐக்கிய நாடுகள் சபை 2012 ல் விருதளித்து பாராட்டியது.

* இதைப் பார்த்த மற்ற மாநிலங்களும் வரிசையாக இந்தச் சட்டத்தை இயற்றத் தொடங்கின.

* தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டத்திற்காக முதலில் 16.11.12 ல் ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி நடத்தியது.

* பிறகு லோக் சத்தா கட்சியின் ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெய்கணேஷ் இருவரும் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் சுமார் 20 ஆயிரம் கி.மீ பயணம் செய்து  சேவை பெறும் உரிமை சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

* சேவை பெறும் உரிமை சட்டம் வேண்டி, சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த பொதுநல வழக்கு 20.4.15 ல் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ” சேவை பெறும் உரிமை சட்டம் ” தமிழகத்திற்குத் தேவையில்லை ” அம்மா திட்டமே ”   போதுமானது என்று தமிழக அரசு  தெரிவித்ததால் அந்த பொதுநல வழக்கும் தள்ளுபடியானது.

* டெல்லியில் 26.11.15 ல்   கெஜ்ரிவால் செய்த  ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் இந்தச் சட்டம் மற்ற மாநிலங்களைவிடக் கூர்மையானதாக மாறியுள்ளது. அதன்படி…..

உரிய நேரத்தில் 150 விதமான சேவைகளை வழங்காத அரசு அதிகாரிகளின் ஊதியப்பணத்தில் இருந்து பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் இழப்பீடு தொகை தானாகவே வரவு வைக்கும்படியாக சட்டம் திருத்தப்பட்டது.

* தமிழகத்தில் பல இயக்கங்கள் சேவை பெறும் உரிமை சட்டத்திற்குக் குரல் கொடுத்தும் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது.

* 2016 ஆண்டில் பிரதான எதிர்கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் சேவை பெறும் உரிமை சட்டம் இடம் பெற்றாலும் அவர்களால் 2016 ல் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர்களில் யாராவது ஒருவர் தனி நபர் மசோதாவாகக் கூட தாக்கல் செய்யாததால்தான் இந்த 234 பேரையும் கோமாளிகள் என்றழைக்கிறோம். இதுமட்டுமல்ல…..

* 21.8.14 ல் இந்த 234 சட்டமன்ற உறுப்பினர்களும் மின்னல் வேகத்தில்” வேட்டி அணியும் உரிமை சட்டம் ” நிறைவேற்றியது நமக்குத் தெரியும். இதனால் எத்தனை தமிழர்கள் பயனடைந்தனர் ?  பணக்காரர்கள் பணக்கார “க்ளப்” உள்ளே செல்ல ஒரு சட்டமியற்றியவர்களை இதைவிட எப்படி நாகரீகமாக சுட்டிக்காட்டுவது?

அதே சமயம் சேவை பெறும் உரிமை சட்டம் மூலம் 7 கோடி தமிழர்களும் பயன் அடைந்திருப்பார்களே. இது ஏன் இவர்களுக்கு புரியவே இல்லை ?ஆகவேதான்  234 பேரையும் கோமாளிகள் என்றழைக்கிறோம்.

 ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் மட்டும் தற்போதுதான் முதன் முறையாக சில மாதங்களுக்கு முன்பு  சட்டமன்ற உறுப்பினராகிருக்கிறார்.…அவர்…சட்டமன்றத்தில் சேவை பெறும் உரிமைச் சட்டம் தொடர்பாக பேச வேண்டும்…

* இந்தப் பதிவைப் பார்த்தாவது

” சேவை பெறும் உரிமை சட்டத்தை ” தமிழகத்தில் நிறைவேற்றுமாறு 234 சட்டமன்ற உறுப்பினர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

கு.மூர்த்தி

இணை ஒருங்கிணைப்பாளர்

ஊழலுக்கு எதிரான  கூட்டு நடவடிக்கை குழு. சேலம்.

மக்கள்செய்திமையம் ஆசிரியரின் செல்போனில் தொடர்புக்கொண்டு, இந்த செய்தியை வெளியிட முடியுமா என்று ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் கு.மூர்த்தி கேட்டார்… சேவை பெறும் உரிமை சட்டம் தொடர்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது..

 இது போல பொது மக்கள் தொடர்பான செய்திகள், கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம்…

 

 

Comments

comments