அன்புவின் இதயம் . . .

அன்புவின் இதயமாகிய நான், 13-10-2021 அன்று மதியம் 01:15க்கு என் இயக்கத்தை நிறுத்தி கொண்டேன்.

கடந்த 28 ஆண்டுகளில் நான் பல கண்டனங்கள், பல அழுகுரல்கள், பல கோபதாபங்களை கண்டு இருக்கிறேன்.

என் அன்பு எழுத ஆரம்பித்தபோது, நான் உற்சாகமாய் துடித்தேன்.

என் துடிப்பு பலமுறை அதிகரித்து வந்தது. ஏது தெரியுமா? சக பேனா இதயங்களில் ஏற்பட்ட வலி, ரணம், ஏக்கம் காரணமாக.

என்ன செய்வேன்!? நான் வெறும் துடிக்கும் இதயம் மட்டுமே!!!

பல முறை சக பேனாக்கள் படும் துயரை காண,காண. அவர்களுக்கு ஒரு வீடு, குழந்தைகளுக்கு படிப்பு, மருத்துவத்திற்கு காப்பீடு , ஊதியம் கிடைக்க வேண்டும் என ஏங்க ஆரம்பித்தேன்.

புதிது புதிதாய் பேனாக்கள் வரும்பொழுது மகிழ்ந்து மகிழ்ந்து அந்த இதயங்களையும் ஒருங்கிணைத்து நமக்கு நாமே நன்மைகள் தேட முயற்சித்தேன்.

1997 அக்டோபர் மாதம் காலை, சக பத்திரிக்கையாளர்களின் அலறல்

“அண்ணா, வீட்டு உரிமையாளர் வாடகை தராத காரணத்தால், எல்லா பொருட்களையும் எடுத்து எறிந்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டார். தெருவில் நிற்கிறேன்”- என்றார்.

நான் சில நொடிகள் நின்றுவிட்டு இயங்க ஆரம்பித்தேன். அந்த தம்பியை உடனே சென்று, அழைத்து வந்து நான் வசிக்கும் பகுதியில் குடி வைத்தேன்.

பல நிகழ்வுகள் . . .

1998 ஜுலை நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவன், அண்ணா பல்கலை கழகத்தில் சேர அனுமதி கிடைத்தும் கட்டணம் கட்ட பணமில்லா நிலை. மதியம் 3 மணிக்குள் பணம் கட்ட வேண்டும்.

காலையிலிருந்து அலைந்து பல நண்பர்களிடம் உதவி பெற்று மதியம் 2 மணிக்கு பணம் கட்டியப்பின், இதயமாகிய நான் சீராக இயங்க ஆரம்பித்தேன்.

ஊடக/பத்திரிக்கை துறையில், பல்வேறு குளறுப்படிகள்.

 பெரிய பத்திரிக்கையில் பணிபுரிபவருக்கு பல சலுகைகள் கிடைக்கும். ஆனால்,சிறு பத்திரிக்கையில் பணி புரிபவருக்கு சலுகைகள் என்பது எட்டா கனி.

இவற்றை முன் நிறுத்தி பல பல போராட்ட களங்கள். ஒவ்வொரு களத்திலும் பல்வேறு அனுபவங்கள்.  அதை ஒட்டி, வேறு மாதிரி முன்னெடுப்புகள்.

பல ஊடக நண்பர்களுக்கு மனித உரிமை மீறல்கள், காவல் துறையிலிருந்து, காக்கும் அரசு வரை.அப்பொழுதெல்லாம், நான் துடித்த துடிப்பு, அதையொட்டி சக நட்புகளின் கருத்து பரிமாற்றம், பின் அறிக்கைகள், வேண்டுகோள்கள், அடையாள போராட்டங்கள், என பல நாட்கள் சமநீதி வேண்டி, எதிர்ப்புகளையும், நியாயங்களையும் பதிவு செய்து கொண்டே இருந்தபொழுது என துடிப்பு பல மடங்கு உயர்ந்தது.

ஏன் சமீபத்தில் கூட கொரோனா வீரியமாய் இருந்தபோது பல பேருக்கு மருத்துவமனையில் அனுமதி, உடனடியாக மருந்துகள் என உதவினேன். உயிர் பிழைத்த அனைவரும், என் முன்னே நின்றபோது நான் என் “உயிரை” புரிந்தேன்.

இப்படிதான் பல களங்கள் கண்டதின் பேரில், சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின், தலைமை பொறுப்பை ஏற்க நேர்ந்தது.

எண்ணற்ற துன்பங்கள். துயரங்கள் நமது ஊடகத் துறை நண்பர்களுக்கு நேர்ந்தது. அவர்களின் இதயம் ஒரு அமைதியான வாழ்க்கைக்கு ஏங்குவது எனக்கு புரிந்தது. நிறைவான, ஆனால் நிலையான வருமானம் ,சிறிய ஆனால் உருப்படியாக ஒரு வீடு, சிறிய ஆனால் தொந்தரவில்லாத ஒரு இருசக்கர வாகனம். நல்ல தரமான மருத்துவ வசதிக்கு ஒரு உத்திரவாதம். பிள்ளைகள் படிக்க நல்ல பள்ளிகளில், கல்லூரிகளில் இடம், வேலை வாய்ப்பு.சில நேரங்களில் ஏற்படும் துயரங்களுக்கு ஆறுதலாக குடும்பங்களின் வாழ்வாதார உறுதிமொழி . உடலில் ஏற்படும் ஊனங்களுக்கும் பின் வருமானத்திற்கு வழி, அதற்காக வேலைவாய்ப்பு ,இவ்வளவுதான்  ஊடக நண்பர்களின் எதிர்பார்ப்பு.

இதை நோக்கி பயணித்த போது அடக்கு முறையில் 119 நாட்கள், என்னைப்போல் அன்புவும் சிறையில். சில தடவைகள் என் துடிப்பை நிரந்தரமாக நிறுத்த முயற்ச்சிகள்.

கொஞ்சம் கொஞ்சமாக துடிப்பை நிறுத்த, கடுமையான முயற்சிகள். . .

என்னை விட, என் இதயத்தை தாங்கி நின்ற உடலை இவைகள் பதித்தன. உடல் பெருத்து, உப்பு அதிகமாகி, சர்க்கரை பற்றிக் கொள்ள , மாத்திரைகள் என்னை கவனிக்க, நானோ ஊடக நண்பர்களுக்கு பலன் கிடைக்க முயற்சி எடுத்த வண்ணம் ஆண்டுகள் கடந்தன .

119 நாட்கள் அடக்கு முறை என் உடலை மிகவும் பாதித்தது. என் மனது அதுபற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை. ஓய்வை மறக்க போராட்டமே என்னை முன்னெடுத்து சென்று கொண்டு இருந்தது. மருத்துவர்கள் ஓய்வெடுக்க வற்புறுத்திய போது பல முறை அதை மீறினேன்,விளைவு நோய்கள் என்னை தாக்கி கொண்டே இருந்தது. மீறி…மீறி களங்கள் பல கண்டேன்.நியாயத்தை நிலை நிறுத்த முயன்றேன். பல வெற்றிகள் , ஒரு சில தோல்விகள் .

  • செப்டம்பர்  30, 2021– காய்ச்சல். . .உடனடியாக மருத்துவர்கள்  ஆலோசனை, கொரோனா பரிசோதனை ஒன்றும் பயமில்லை.கொரோனோ தொற்று இல்லை என்றார்கள்.
  • அக்டோபர் 02, 2021 – உடல் வலி, தலை வலி, காய்ச்சல் , ஊசி, மருந்துகள்.
  • அக்டோபர் 03, 2021 – மருத்துவமனையில் அனுமதி. . பல நண்பர்கள், சில அதிகாரிகளின் விசாரிப்புகள். . .பல யோசனைகள்.
  • அக்டோபர் 04, 2021 – வேறு மருத்துவமனை. . .உயிர் வாழ (ஆக்ஸிஜன்) குறைகிறது.
  • அக்டோபர் 05, 2021 – செயற்கை உயிர் வாயு,செலுத்தப்படுகிறது. நினைவுகள் மட்டும் ஓடிக்கொண்டிருகிறது.மருத்துவர்களின் பல முயற்சிகள், சில அதிகாரிகள், நண்பர்களின் முயற்சிகள்.
  • அக்டோபர் 13, 2021 – மதியம் 12:50 உயிர் வாயு, உடலுக்குள் செல்வது குறைகிறது, என்னை சுற்றி என் ஊடக நண்பர்கள். . .அவர்களின் தேவைகள் இப்படி நினைவு சுழல்கிறது.. ..கொஞ்சம் கொஞ்சமாக உயிர் வாயு 64. . .60. . .54. . .52. . .48. . .37. .28. . .19. . .13 கடைசியாக “0” என்னுள் நான் அடங்கினேன். என் துடிப்பு நின்றது.

ஊடக நண்பர்களின் தேவைகள் ? ? ?  விரைவில் நல்ல தலைவன் வருவான் என்ற நம்பிக்கையில் ஓய்வு இல்லாமல் துடித்து கொண்டிருந்த நான் நிரந்தர ஓய்வுக்கு சென்றேன்.

Comments

comments

About admin

Check Also

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் …

Leave a Reply

Your email address will not be published.